credit ns7.tv
இந்த ஆண்டு இறுதியிலேயே கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கும் என்று தென்கொரிய அதிபர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. சீனாவின் வூஹான் நகரில் பரவிய இந்த கொடிய வைரஸ், இன்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தொடரும் லட்சக்கணக்கான உயிரிழப்புகளுடன், கடும் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.
சீனாவுக்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்டிருந்த தென்கொரியா, தொடர் தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் மூன் ஜே இன், கொரோனாவின் தாக்கம் முடிவடைந்துவிடவில்லை என்றார்.
நீண்ட கால யுத்தத்தில் நாம் இருப்பதாகவும், குறிப்பிட்டார். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் விதிமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆண்டு இறுதியிலேயே மீண்டும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய கொரியாவின் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மைய அதிகாரி ஜியோங் யுன் கியோங், சியோல் நகரில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் மீண்டு வந்தாலும், வைரஸ் தொற்று மீண்டும் பரவும் அபாயம் இருப்பதால் சமூக விலகல் உள்ளிட்ட விதிமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தென் கொரிய அதிபர் கூறிய கருத்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.