வெள்ளி, 1 மே, 2020

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டுகோள்!

சென்னை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மே 2-ம் தேதிக்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, மாநகராட்சி துணை ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், பேரிடர் கால பயன்பாட்டுக்காக எந்த ஒரு கட்டடத்தையும் மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005, பிரிவு 30(2) அதிகாரம் அளிப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 
இந்த சட்டத்தை பயன்படுத்தி, தேர்வு செய்யப்படும் கட்டடங்களை நிவாரண முகாம்களாகவோ அல்லது முகாம்களாகவோ மாற்றிக் கொள்ள முடியும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கொரோனா வைரஸ் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக, சென்னை மாநகரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளையும் மே 2ம் தேதிக்குள் கையகப்படுத்துமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு, மாநகராட்சி துணை ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
இது குறித்த தகவல்களை தலைமை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வரை அந்த மையத்தின் பொறுப்பு அதிகாரியாக நியமிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
credit ns7.tv