கீழடியில் 12.கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாகும் அகழ்வைப்பகத்திற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அடிக்கல் நாட்டவுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஊராட்சியில் தற்போது, 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இப்பகுதியில் நடந்து முடிந்த அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற குவளை, முதுமக்கள் தாழிகள், ஓடுகள், பானைகள், வளையல்கள், எலும்புக்கூடுகள், செங்கல் சுவர் உள்ளிட்டவைகளை உலகறிய செய்யயும் வகையில் அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து அங்கு 12.கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் அகழ்வைப்பகம் நிறுவப்படவுள்ளது. இதனையொட்டி இன்று காலை 10மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அகழ்வைப்பகத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக, தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.