கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருப்பவர்களுக்கு அரசு கொடுக்கும் தண்டனை போல் மின் கட்டணம் வந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வெளியிட்ட செய்தியில்,கொரானா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதைவிட அதிகமாக மின்கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
மின்கட்டணம் செலுத்துவதற்குச் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களுக்கு ஜூலை 30-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய மு.க.ஸ்டாலின், 30-ந் தேதி முடிந்து விட்டால், மக்களிடம் பணப்புழக்கம் வந்துவிடுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு, பிற மாநிலங்களில் மின் கட்டணச் சலுகை வழங்கப்படுவது போல், தமிழக அரசு கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ள திமுக தலைவர், மின் கட்டண உயர்வு தொடர்பாக சிலரது வீடுகளுக்கு வந்துள்ள ரீடிங் அளவையும் சுட்டிக்காட்டினார்.