குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால் ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி நீரை உடனே காவிரியிலிருந்து திறந்துவிடுமாறு காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 30-வது குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய நீரை உடனே வழங்குமாறு வலியுறுத்தினர். குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு நீர் தேவைப்படுவதால் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இக்குழு கூட்டத்தின் அறிக்கை காவிரி நதிநீர் மேலாண்மை பார்வைக்கு உடனே சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.