வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 34 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்திவரும் அதே நேரத்தில் வடகிழக்கு மாநிலமான அசாம், கொரோனா மற்றும் கனமழை வெள்ளம் என்ற இரண்டு பேரிடர்களில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக இம்மாநிலத்தில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால் அங்குள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட 8 ஆறுகளில் ஆபத்து கட்டத்தையும் தாண்டி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.
இதனால் அங்குள்ள 3371 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு 1.28 லட்சம் ஹெக்டேர் அளவிலான பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
இதில் ஹோஜாய், தேமாஜி, லக்கிம்பூர், பிஸ்வநாத், சோனித்பூர், உதல்கூரி, டாரங், பக்ஸா, நல்பரி, பார்பேட்டா, சிராங், பொங்கைகான், கோக்ராஜார், துப்ரி, கோல்பாரா, கம்ரூப், நாகதூலி திப்ருகார், டின்சுகியா மற்றும் கர்பி அங்லாங் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் பல சாலைகள், பாலங்கள், கல்வெட்டுகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
காசிரங்கா தேசிய பூங்காவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இரண்டு காண்டாமிருகங்கள் உட்பட 66 காட்டு விலங்குகள் இறந்துவிட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளை மாநில மற்றும் தேசிய பேரிடர் நிவாரணப் படையின் பணியாளர்கள் இரவு பகல் பாராமல் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அசாமில் 33 மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 34 லட்சம் மக்கள் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 61 பேர் உயிரிழந்ததாகவும் 44,000 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று ஆய்வு செய்த அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால், வெள்ள சீரமைப்பு மற்றும் மீட்ப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.