மேற்கு வங்க பாஜக எம்.எல்.ஏ மரணம் தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் மமதா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஹேம்தாபாத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 2016ம் ஆண்டு போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்று, பின்னர் 2019ம் ஆண்டு நாடாளுடன்ற தேர்தல் முடிவுக்கு பின் பாஜகவில் இணைந்த எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய், கடந்த திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கிராம சந்தை கடையின் முன்பு அவரது உடல் மீட்கப்பட்டது. நள்ளிரவு 1 மணி அளவில் அடையாளம் தெரியாத நபருடன் அவர் சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் கொலை செய்யப்பட்ட பிறகே தூக்கிலிடப்பட்டதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டினர்.
இதனையடுத்து எம்.எல்.ஏ கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பாஜக தலைவர்கள் சிலர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். இந்நிலையில் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, குடியரசு தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். எம்.எல்.ஏ கொலை விவகாரத்தில் பாஜக உண்மைகளை சிதைப்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘இது தற்கொலை என சந்தேகிப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் மற்றும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. எம்.எல்.ஏ மரணம் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த குறிப்பும், பணப்பரிமாற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களின் பெயர்களையே குறிப்பிட்டிருந்தது. பாஜக கூறுவது போல் இது அரசியல் சம்பந்தமான வழக்காக தெரியவில்லை. விசாரணையை தீவிரப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. முறையான விசாரணைக்காக சிஐடியிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசியல் கட்சிகளையும், அதன் தலைவர்களையும், நிர்வாகிகளையும் மதிக்கும் மாநிலம் மேற்குவங்கம். மேற்குவங்கத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் உயிரிழந்தது துரதிருஷ்டவசமானது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று மமதா பானர்ஜி எழுதியுள்ளார். ஆனால் குற்ற உணர்ச்சியால் தான் இந்த விளக்க கடிதத்தை மமதா பானர்ஜி எழுதியுள்ளதாக பாஜகவினர் விமர்சனம் செய்துள்ளனர்.