சனி, 4 ஜூலை, 2020

சென்னை டு திருச்சிக்கு 4 மணி நேரம்தான்: தமிழகத்தில் 14 வழித்தடங்களில் தனியார் ரயில்கள்

பயணிகள் ரயில் சேவையினை நடத்துவதில் தனியார் பங்கேற்பிற்னை ஈடுபடுத்தும் திட்டத்தில், தமிழகத்தில் 14 இணை பயணப்பாதைகள் கண்டறியப்பட்டது.

இந்த இணை பயணப்பாதைகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வண்டியும் குறைந்தபட்சம் 16 ரயில் பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் என்றும், அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  ரயிலேவே அமைச்சகம் இது குறித்து  வெளியிட்ட செய்தி குறிப்பில், “தனியார் பங்கேற்பிற்னை ஈடுபடுத்தும் திட்டத்தில் குறிப்பிட்ட பயணப்பாதையில் இந்திய ரயில்வே செயல்படுத்தி வரும் அதிவேக வண்டியின் வேகத்தை ஒத்ததாக அல்லது அதைவிட வேகமானதாக இந்த வண்டிகளின் பயண நேரம் இருக்கும்” என தெரிவித்தது.

இதன் மூலம், சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், புது தில்லி, மும்பை, ஹவுரா, ஜோத்பூர், மங்களூரு செலவதற்கான  பயண நேரம் கணிசமான அளவிற்குக் குறைக்கப்படும். உதாரணமாக, 4 மணி நேரத்தில் சென்னை- திருச்சி பயணிகள் ரயில் சேவை இயக்கப்படும்.

முன்னதாக, 109 இணை பயணப்பாதைகளில் 151 நவீன ரயில் வண்டிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயணிகள் ரயில் சேவையினை நடத்துவதில் தனியார் பங்கேற்பிற்கென தகுதிக்கான கோரிக்கையை (Request for Qualifications (RFQ) ரயில்வே அமைச்சகம் கோரியது.

குறைந்த பராமரிப்பு தேவைப்படுகின்ற, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, குறைந்த பயண நேரம் பிடிக்கின்ற, வேலைவாய்ப்பினை அதிகரிக்கின்ற, பயணிகளுக்கு கூடுதலான பாதுகாப்பை வழங்குகின்ற, உலகத் தரத்திலான பயண வசதியை வழங்குகின்ற, அதே நேரத்தில் பயணிகள் போக்குவரத்துத் துறையில் தேவைக்கான வழங்கலில் நிலவும் பற்றாக்குறையை குறைக்கும் வகையிலும் வண்டிகளை அறிமுகப்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

இருப்பினும், தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 14  இணை பயணப்பாதைகளில் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்குவது குறித்து பல ரயில்வே அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  “தற்போது முன்மொழியப்பட்ட பல தடங்களில், ரயில்களை 110 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்க முடியும், அதிவேக வண்டி செல்வதற்கு நமது ரயில்வே தடங்களை மேம்படுத்த வேண்டும்” என்று  பொதுவான கருத்து ரயில்வே அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது.

தனியார் பங்கேற்பு கொண்டு இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவையின் ஒப்பந்த கால அளவும் 35 ஆண்டுகளாக இருக்கும். நிர்ணயிக்கப்பட்ட இழுத்துச் செல்லும் கட்டணங்கள், நுகர்விற்கு ஏற்ப மின் கட்டணங்கள், வெளிப்படையான ஏல நடைமுறையின் மூலம் தீர்மானிக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாயில் ஒரு பங்கு ஆகியவற்றை இந்திய ரயில்வேக்கு செலுத்த வேண்டும்.

இதனால், பயணிகள் ரயில் சேவைகள் கட்டணம் சற்று அதிகரிக்கும் என்ற பொதுவான கருத்து மக்கள் மனதில் எழுந்துள்ளது.