அருண் ஜனார்தனன்
போலிஸ் சித்திரவதை தொடர்பான மற்றொரு புகார் தமிழகத்தில் வெளிவந்துள்ளது. 32 வயதான அந்த நபர், இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டதாகக் கூறி, எலும்பு முறிவுகளால் கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியிலுள்ள திருச்செந்தூரைச் சேர்ந்த, எஸ்.மணிகண்டன் கேரளாவின் குருவாயூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவர் ஜூன் மாதம் தொடக்கத்தில் 500 கி.மீ தூரத்தில் உள்ள திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் அளித்த புகாரில், ஜனவரி மாதம் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவிற்கு எதிராக, போலீசார் அவருக்கு எதிராக, செயல்பட்டதாகக் கூறியுள்ளார்.
போலிஸ் சித்திரவதைக்கு ஆளானவர்களை தூத்துக்குடி மாவட்ட சிறைகளில் மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து வரும் நிலையில், மணிகண்டன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பி.ஜெயராஜ் அவரது மகன் ஜெ.பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீதிபதி இதைச் செய்து வருகிறார்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உட்பட பல வழக்கில் சம்பந்தப்பட்ட அதே சாத்தான்குளம் நீதித்துறை மாஜிஸ்திரேட் பி சரவணனால் தான் மணிகண்டனும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணனின் “நாடார் சமூகத்திற்கு எதிராக பேசியது” தான் மணிகண்டனின் வழக்கு, என்ற தூத்துக்குடியின் புதிய எஸ்.பி. ஜெயகுமார், மணிகண்டனுக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றார். “நான் இப்போது தான் பொறுப்பேற்றுள்ளேன். வழக்குகளை ஒவ்வொன்றாக படித்து வருகிறேன். அதானால் குற்றச்சாட்டுகள் குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது” என்றார்.
குருவாயூரிலிருந்து மணிகண்டன் கொண்டு வரப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட விதம் நீதிமன்றத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று வழக்கை அறிந்த ஒரு வட்டாரம் தெரிவித்தது. தனது வீடியோ பதிவில், ராதாகிருஷ்ணன் தனது சமூகத்திற்கு ஆதரவாக இருப்பதாக மணிகண்டன் குற்றம் சாட்டினார். அந்த வீடியோ வைரலாகியதால், அவரும் திருச்செந்தூரில் உள்ள அவரது குடும்பத்தினரும் நாடார் சமூகத்திடமிருந்து அச்சுறுத்தல்களைப் பெற்றதாக, அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஜூன் 6 ஆம் தேதி, போஸ்ட் மாஸ்டரான மணிகண்டனின் தந்தை, மற்றும் அவரது சகோதரரை போலீசார் வரவழைத்தனர். ஜூன் 7 அதிகாலை, குருவாயூரில் உள்ள தனது வாடகை அறைக்கு 5 பேர் வந்திருந்ததாக மணிகண்டன் தெரிவித்தார்.
அவர்கள் தன்னை திருச்செந்தூர் காவல்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியதாகவும், தனக்கு கை விலங்கு பூட்டி, பணம், ஏடிஎம் அட்டை, அடையாள அட்டைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, திருச்செந்தூருக்கு அழைத்து வந்ததாகவும், மணிகண்டன் தனது புகாரில் கூறுகிறார். தனது சித்திரவதை தூத்துக்குடி அருகே தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இரவு 10.30 மணியளவில் திருச்செந்தூர் காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். அங்கு அவரது சகோதரர் மற்றும் தந்தையை கண்டிருக்கிறார். இருப்பினும் “அவர்கள் என்னுடன் பேச அனுமதிக்கப்படவில்லை” என்கிறார்.
ஜூன் 8 ம் தேதி, திருச்செந்தூர் டி.எஸ்.பி விசாரணை நடத்தப்போவதாக தன்னிடம் கூறப்பட்டதாக மணிகண்டன் கூறுகிறார். பின்னர் அவர் காவல் நிலையத்தின் முதல் மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். காலையில் இருந்து பிற்பகல் 3 மணி வரை “தொடர்ந்து” சித்திரவதை செய்யப்பட்டதாகவும் மணிகண்டன் கூறுகிறார். “இரண்டு லத்திகள் உடைந்து, அவர்கள் ஒரு பிளாஸ்டிக் குழாய் மூலம் தன்னை சித்திரவதை செய்ய தொடங்கியதால்” தனது கால் விரல்கள் முறிந்ததாகவும், அவர் கூறுகிறார்.
ஜூன் 9-ம் தேதி மாலை 5.30 மணியளவில், போலிஸ் பணியாளர்கள் அவரது இடது கையை ஜன்னல் கிரில்லில் கட்டி, வலதுபுறத்தை ஒரு மேடையில் வைத்து, வெற்று சாக்கில் போர்த்தி, இரும்புக் கம்பியால் தாக்கிக் கொண்டே இருந்ததாக மணிகண்டன் கூறுகிறார். “நான் கிட்டத்தட்ட சரிந்து போகும் வரை அவர்கள் சித்திரவதைகளைத் தொடர்ந்தனர்” என்கிறார்.
சித்திரவதை குறித்து மருத்துவரிடம் அல்லது மாஜிஸ்திரேட்டுடன் ரிமாண்ட் செய்வதற்கு முன்பு பேச வேண்டாம் என்று தான் எச்சரிக்கப்பட்டதாக மணிகண்டன் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இரவு 9.30 மணியளவில், திருச்செந்தூர் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் முத்துராமனும் அவரது ஜூனியர்களும் மணிகண்டனை நீதித்துறை மாஜிஸ்திரேட் சரவணன் முன் ஆஜர்படுத்தினர். கீழே விழுந்ததன் காரணமாக ஏற்பட்ட காயங்கள் என விளக்கமளித்ததாகவும், நீதிபதி அவரை தூத்துக்குடியில் உள்ள பெருராணி சிறைக்கு ரிமாண்ட் செய்ததாகவும் மணிகண்டன் கூறுகிறார்.
32 வயதான மணிகண்டன் ஜாமீனில் விடுவிக்கப்படுவதை நினைத்து அஞ்சுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவர் மீண்டும் அழைத்துச் செல்லப்படலாம் என்ற அச்சத்தில் இருப்பதாக, நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.