வெள்ளி, 3 ஜூலை, 2020

அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை; தலைவர்கள் கண்டனம்

புதுகோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது காணாமல் போனார். சிறுமி அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்று பெற்றோர்கள் கருதிய நிலையில் இரவு வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்சி அடைந்தனர். பின்னர், பெற்றோர்கள் குழந்தையை உறவினர்கள் வீடுகள், அருகில் உள்ள இடங்களில் தேடிய பெற்றோர் குழந்தை கிடைக்காததால் சிறுமி காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் சிறுமியின் உடலை நேற்று கிராமத்திற்கு அருகே ஒரு ஏரியில் கருவேல மரங்கள் நிறைந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுமியின் உடலை போலிசார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று வெளிவந்த பிரேதப் பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜேஷ் என்ற நபரை போலீசார் கைது விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மேலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


அறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெண்கள் – குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இத்தைகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


திமுக எம்.பி. கனிமொழி, அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது. இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், “அறந்தாங்கி சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளியை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர துரித நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுமிக்காக நீதி கேட்டு டுவிட்டரில் நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டதால் டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது.