மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜு ஆகியோரை தவிர, மற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணிகள் குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் ஆகியவை விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று, பிறகு அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் இந்த உள் இடஒதுக்கீடு பொருந்தும் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து, விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடப்பு கல்வியாண்டிலேயே 7.5% சதவீதம் உள் இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதன் மூலம், மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 150-க்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ரூ.5,000 கோடி ரூபாயில் முதலீடு செய்யும் 6 புதிய நிறுவனங்களுக்கும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு பள்ளி மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் தொலைக்காட்சி வழி பாடங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி கல்வி தொலைக்காட்சி மூலம் திங்கள் முதல் வெள்ளி வரை இரண்டரை மணி நேரம் பாடங்கள் ஒளிபரப்படும்.
இதேபோல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.248.53 கோடி மதிப்பிலான புதிய சாலைகள், பாலங்கள், அரசு கட்டடங்களையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.