வியாழன், 16 ஜூலை, 2020

விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவம் - மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி இடமாற்றம்!

மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விவசாயிகள் இருவரும் தற்போது அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்படும் இவர்கள் விவசாயிகள். சொந்த நிலத்தை விட்டு தரமாட்டோம் எனக்கூறி விஷம் அருந்தியதால் அவர்களை அடித்து தரதரவென்று இழுத்து சென்று ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர் காவலர்கள். எங்கே நடந்தது இந்த சம்பவம்.


மத்திய பிரதேச மாநிலம். குணா மாவட்டம்.. இந்த பகுதியில் அரசு கல்லூரி கட்டுவதற்காக விவசாயிகளின் நிலத்தை அரசு கைப்பற்றி வருகிறது. அதன் ஒருப்பகுதியாக ராஜு என்ற விவசாயின் நிலத்தையும் கைப்பற்ற முயன்றுள்ளனர் அரசு அதிகாரிகள்... ஆனால், தற்போது தான் பயிரிட்டுள்ளேன்... பயிர் வளரும் வரை காத்திருங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஜூ... ஆனால் அவரது வார்த்தைக்கு செவி கொடுக்காத அதிகாரிகள், பயிர்களை அழித்து விட்டு நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளனர். 

இதனால் மனமுடைந்த ராஜூவும் அவரது மனைவி சாவித்திரி தேவியும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளனர். ஆனால் வாழ்வாதாரத்தை அழித்து விட்டு எங்களை காப்பாற்ற வேண்டாம் என கூறி மருத்துவமனைக்கு செல்ல மறுத்துள்ளனர் அந்த குடும்பத்தினர். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர் அவர்களை அடித்து தரதரவென்று இழுத்து சென்று ஆம்புலன்சில் ஏற்றினர்.


தற்போது அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. ராஜூ, சாவித்திரி தேவி தம்பதிக்கு விவசாயத்திற்காக வாங்கிய 3 லட்ச ரூபாய் கடன் உள்ளதாகவும், தற்போது நிலத்தை அரசு பிடுங்கி கொண்டால் வாழ்வதற்கு வழியில்லாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதும், பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்தனர்... இதனை அடுத்து குணா மாவட்டத்தின், ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்து மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுக்கான் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.