சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
திமுக எம்பி கனிமொழி, பெங்களூருவை சேர்ந்த சுரேஷ்பாபு உள்ளிட்டோர் அளித்த புகாரின் பேரில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த நோட்டீஸை அனுப்பி உள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தமிழக டிஜிபி, சிறைத்துறை ஐஜி, தூத்துக்குடி எஸ்பி ஆகியோர் 6 வாரத்திற்குள் பதிலளிக்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 6 வாரத்திற்குள் பதில் அளிக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீசில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் - பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தில், அவர்களின் குடும்பத்திற்கு, முதலமைச்சர் அறிவித்தபடி விரைவில் அரசு வேலை வழங்கப்படும், என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக, அதிமுக அறிவித்தபடி கட்சி சார்பில், 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அவர்களின் குடும்பத்திற்கு வழங்கியதாகவும், அவர் தெரிவித்தார்.