வியாழன், 2 ஜூலை, 2020

பணமதிப்பிழப்பை போல் டிக்டாக் தடையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்: திரிணாமுல் எம்.பி கருத்து!

பணமதிப்பிழப்பை போல் டிக்டாக் தடையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நஸ்ரத் ஜஹான் கருத்து தெரிவித்துள்ளார். 

கல்வான் மோதலை தொடர்ந்து இந்தியா- சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கான தடை ஆரம்பமாகிவிட்டது. அந்த வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சீன நிறுவனங்களுக்கு சொந்தமான 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. குறிப்பாக டிக்டாக் தடை அதன் பயனர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இருப்பினும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து மக்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் அரசின் MyGov டிக்டாக் கணக்கு உடனடியாக செயலிழந்தது. இந்த கணக்கை 1.1 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் டிக்டாக்கை தடை செய்த மத்திய அரசின் முடிவால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி நஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், ‘டிக்டாக் ஒரு பொழுதுபோக்கு செயலி. இதனை தடை செய்தது அவசர முடிவு. இதில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது? வேலை இல்லாமல் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? பணமதிப்பிழப்பை போல் டிக்டாக் தடையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். தேசிய பாதுகாப்பிற்காக டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த முடிவால் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் யார் பதிலளிப்பார்கள்?’ என கருத்து தெரிவித்துள்ளார்.