வியாழன், 16 ஜூலை, 2020

பழங்குடி மாணவர்களின் கல்வி என்னாகும்? ஐஇ தமிழ் நேரடி ரிப்போர்ட்

இந்தியாவில் மொத்தமாக நாடோடிகள் மற்றும் பூர்வகுடிகள் என்று மொத்தமாக 573 வகையான பழங்குடியினர் உள்ளனர். அவர்களின் மக்கள் தொகை என்பது கிட்டத்தட்ட 6.7 கோடியாகும். மார்ச் மாதம் துவங்கி இன்று வரை தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்றவர்களின் எண்ணிக்க்கையை கணக்கில் கொண்டால் இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடியை தாண்டும் என்கிறது ஜூன் மாதம் 8ம் தேதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி தொகுப்பு.

அவர்களில் பெரும்பாலோனார் பட்டியல் இனத்தவர்களாகவும் பழங்குடிகளாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏன் பூர்வகுடிகளும், அலைகுடிகளுமே புலம் பெயர் தொழிலாளர்களாக மற்ற மாநிலங்களுக்கு வேலைக்கு வருகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலை தேட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். புலம் பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக நடந்தே தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றனர்.

கோடை வெயில், வறண்ட எண்ணங்களுடன் நாளைக்கு என்ன என்ற பதில் தெரியாத கேள்விகளுடன் ஆண்களும் பெண்களும் மட்டும் நடக்கவில்லை.  கல்வி கற்று, மைதானத்தில் விளையாடி, இரவில் நிம்மதியாக உறங்க வேண்டிய குழந்தைகளும் நடந்தே வீடு சென்றனர். அவர்களில் இவ்விருவரின் மரணம் இன்றும் நம்மை பார்த்து, ”பழங்குடி குழந்தைகளுக்கான கல்வி திட்டங்கள் அனைத்தும் வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது என்ற எதார்த்தம் புரிக்கிறது.

மறக்க முடியாத மரணங்களும், கல்வியின் தேவையும்

ஜம்லோ – 12 வயது பெண் குழந்தை. சத்தீஸ்கரை பிறப்பிடமாக கொண்ட அக்குழந்தை, சில நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் உள்ள மிளகாய் தோட்டத்தில் மிளகாய் பறிக்க சென்றுள்ளார். முரியா என்ற பழங்குடி இனத்தை சேர்ந்த அந்த ஒரு சிறுமி மட்டும் அங்கு வேலை பார்க்கவில்லை. அவரைப் போன்று குறைந்தது 10 முதல் 20 குழந்தைகளாவது அங்கே பணியாற்றி இருப்பார்கள். 11 பேர் கொண்ட குழுவுடன், ஏப்ரல் 18ம் தேதி, சத்தீஸ்கரில் இருக்கும் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய கிராமமான பஸ்தருக்கு நடந்து செல்ல முடிவு செய்தார் ஜம்லோ. மூன்றாம் நாள் முடிவில் அவரின் இறந்த உடல் தான் அவருடைய வீட்டை அடைந்தது. வெயிலில் வெகு தூரம் நடந்து வந்தது, ஏற்கனவே இருந்த போஷாக்கு பற்றாக்குறை காரணமாக அவர் மரணத்தை தழுவினார்.

பீகார் தலைநகரம் பாட்னாவில் இருந்து தன்னுடைய கிராமத்திற்கு நடந்தே வந்த ராகேஷ் முஷாகர் என்ற கிழக்கு கங்கை சமவெளிகளில் வாழும் ”மகாதலித்” பழங்குடி இனத்தை சார்ந்த 8 வயது சிறுவன் தன்னுடைய சொந்த ஊர் சென்று சேரும் முன்னரே உயிரிழந்தார். பாட்னாவில் குப்பை சேகரிக்கும் பணியில் தன்னுடைய பெற்றோர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் ராகேஷ் முஷாகர்.

கொரோனா காலத்தில் பாதிப்பிற்கு ஆளாகும் மாணவர்களின் கல்வி தேடல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் மக்கள் பலரும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான நடமாட்ட சுதந்திர எல்லைகள் குறைந்து போயுள்ளதால் அடுத்த என்ன என்ற கேள்வி பலரையும் நிலை குலைய வைத்துள்ளது. உணவு, உடை, இருப்பிடம், வேலை என்று பல அத்தியாவசிய தேவைகள் ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் நேரத்தில் கல்வி குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

Coronavirus lockdown public transportation restrictions impacted daily life of Irular tribes in Coimbatoreஆலமரமேடு இருளர் பழங்குடி குடியிருப்பு (Express Photo by Nithya Pandian)

பல தனியார் கல்வி நிறுவனங்கள் / பள்ளிகள் இணைய வழிக் கல்வி என்று ஆரம்பித்து குழந்தைகளை வதைத்து வருகின்றனர். ஏன் வதை என்றால், அது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு பெரிய வகுப்பறையில் நண்பர்களுடன் அமர்ந்து ஒரு பாடத்தை கவனித்தாலே குறைந்த பட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்துவது கடினம். ஆனால் இன்றோ கையில் செல்ஃபோனை பிடித்துக் கொண்டே 45 – 60 நிமிடங்கள் அதை கவனிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இதுவே 6 – 7 மணி நேரங்களை பிடித்துவிடுகிறது.

பழங்குடி மாணவர்களுக்கு கல்வியை எப்படி கொண்டு போய் சேர்ப்பது?

இது ஒரு புறம் இருக்க, மலைப் பகுதிகளில் வசிக்கும், இன்னும் முறையான நெட்வொர்க் வசதிகள் இல்லாத கிராமங்களில், குறிப்பாக பழங்குடி கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் உண்டு உறைவிட பள்ளிகளை மட்டுமே நம்பிக் கொண்டிருந்த பழங்குடி குழந்தைகளின் கல்விக்கு என்ன தீர்வு?

இதில் முக்கியமாக காண வேண்டியது இரண்டு விசயங்கள். ஒரு வேளை சாப்பிட்டாலும் நல்ல உணவை உட்கொள்ளட்டும் என்று பெற்றவர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பினார்கள். இந்த நான்கு மாதங்களில் அந்த குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய உணவு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அவர்களின் நிலை என்ன? மற்றொன்று, அனைத்து பக்கங்களிலும் வேலை வாய்ப்புகள் குறைந்து வருகிறது. சில இடங்களில் அதிக வேலைக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வேலையில்லா சூழலில் விளிம்பு நிலை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் நிச்சயம் ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல துவங்கியிருப்பார்கள். இனி அவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவார்கள் என்பதற்கான உத்திரவாதம் என்ன?

கோவை – இருளர் பழங்குடி பகுதியில் மாணவர்கள் நிலை

இது தொடர்பாக தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆனைக்கட்டி பகுதிக்கு சென்றது. இருளர் பழங்குடியினர் அதிகம் வாழும் அந்த பகுதிகளில் 5 பள்ளிகள் இருக்கிறது. லாக்டவுனுக்கு முன்னர் ஜம்புகண்டி, ஆனைக்கட்டி, சின்னத்தடாகம், பனப்பள்ளி மற்றும் கொண்டனூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று குழந்தைகள் படித்து வந்தனர். முதல் மூன்று மாதங்களை கூட கோடைகால விடுமுறை என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என்று இந்நிலை தொடருமானால்? அவர்கள் பள்ளி கல்விக்கான இடைவெளி அதிகரிக்கிறது.

புத்தகங்களில் இருப்பதை மட்டுமே மாணவன் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவனின் கற்றல்கள் எக்காரணம் கொண்டும் நின்றுவிடக் கூடாது. கற்றலுக்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் அவன் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார் எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளருமான லட்சுமணசாமி ஒடியன்.

How education through TV and Online are still unreachable to the hill tribal childrenஆலமர மேட்டில் மாலை நேர வகுப்புகள் நடைபெறும் இடம் (Express Photo by Nithya Pandian)

ஆனைகட்டியில் இருக்கும் ஆலமரமேடு பகுதிகளில் மாலை நேர வகுப்புகள் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. பெரிய வகுப்பு மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் வாசிப்பு, வாய்பாடு என்று கற்றுத் தருகிறனர். அந்த வகுப்பு மிகவும் சிறியதாய், ஒரு சின்ன கரும்பலகையுடன் காட்சி அளிக்கும் போது “அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகள் இங்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் நீட் போன்ற தேர்வுகளை இந்த மாணவர்களும், ஆன்லைன் வகுப்புகள், ஸ்மார்ட் வகுப்புகளில் படித்தவர்களும் ஒரே களத்தில் நின்று போட்டியிட வேண்டிய நிலை இருக்கிறது.

மாலை 4 மணியில் இருந்து 8 மணி வரை இவர்களுக்கு இந்த பிரத்யேக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 18 மலைகிராமங்களை உள்ளடக்கிய ஆனைகட்டியில் இது போன்று 2 அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.

”குறிப்பாகவே விளிம்பு நிலையில் வசிக்கும் மக்களிடம் ஸ்மார்ட்போன் என்பது ஆடம்பரமான ஒன்று. இன்று ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு ஆன்லைன் வகுப்பு என்பது சாத்தியம் இல்லை. மலைகளில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நெட்வொர்க் என்பது இன்னும் போராட்டத்திற்கு உரியதாக இருக்கிறது. அந்த பகுதிகளில் ஆன்லைன் வகுப்புகள் என்றாலும் ஸ்மார்ட்போன்களுக்கு எங்கே செல்வது? ஒருவர் இருவர் வைத்திருந்தாலும் அதை கல்வி தேவைக்காக தருவார்களா என்பதும் சந்தேகம் தான் என்கிறார் லட்சுமணன்.

ஜவ்வாது மலையில் இருக்கும் மலையாளி பழங்குடி மாணவர்களின் நிலை

ஜவ்வாது மலையில் இருக்கும் அரசின் பழங்குடி உண்டு உறைவிட பள்ளியின் ஆசிரியர் மகாலட்சுமி இது குறித்து பேசிய போது “ஊரடங்கிற்கு முன்பே மாணவர்களுக்கு எல்லாம் விடுமுறை என்று கூறப்பட்டதால் கர்நாடகா மற்றும் கேரளாவில் இருக்கும் மிளகு, காஃபி, ஏலக்காய், மற்றும் தேயிலை தோட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களை கையோடு அழைத்து சென்றுவிட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அங்கேயே சிக்கிக் கொண்ட மாணவர்களின் நிலை பரிதாபம் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அவர்களுக்கு அங்கே போதுமான உணவு அளிக்கப்படவில்லை. மாலை வரை வேலை செய்யும் பெற்றோர்கள் அதன் பின்பு காட்டுக்குள் சென்று பலாக்காய் ஆகியவற்றை பறித்து உணவு செய்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். அங்கிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் இங்கே வந்த பின்பு தான் அனைவருக்கும் நிம்மதியாய் இருந்தது என்கிறார் மகாலட்சுமி.

”கர்நாடகாவிற்கு சென்ற குழந்தைகளும் பெற்றோர்களோடு சேர்ந்து வேலை செய்துள்ளனர் என்பது வேதனை  அளித்தது“ என்று தொடரும் அவர்  “செப்டம்பர் மாதம் வரைக்கான முதல் பருவத்தேர்வுக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு நிச்சயமாக தயார் நிலையில் தான் வைத்திருப்பார்கள். அதனை பஞ்சாயத்து உதவியுடன் அங்கங்கு இருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்தால் கூட ஏதேனும் எழுதவோ வாசிக்கவோ ஆரம்பித்துவிடுவார்கள்.  புலம் பெயர்ந்து சென்ற குழந்தைகளுக்கான கல்வித் தேவைகளுக்கான பொறுப்பினையும் அவ்வூர் பஞ்சாயத்து மேற்கொண்டு நடைமுறைப்படித்தினால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.  வீணாக பேப்பர் கடைக்கோ, அல்லது மழையில் நனைந்து வீணாய் போவதிற்கு பதிலாய் மாணவர்களுக்கு தருவதில் பிரச்சனையே இல்லை. புத்தகங்கள் மட்டுமில்லை முதல் பருவம் வரை மாணவர்களுக்கு என்னென்ன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதோ அதனை அவர்களின் வீடு தேடி தருவதில் அரசிற்கு நஷ்டம் என ஆக ஒன்றும் இல்லை. இதையே தற்போது அரசு செய்ய வேண்டும்.

ஜவ்வாது போன்ற மலை பகுதிகளில் அனைவரின் வீட்டிலும் மின்சாரம் இருப்பதே பெரும் கேள்விக்குறி தான். அதே போன்று வீடுகளும் தள்ளித்தள்ளி தான் இருக்கும். ஒரு மாணவர் மற்றொரு மாணவர் வீட்டிற்கு சென்று டிவி பார்த்தை அக்குழந்தையும் விரும்பாது, பெற்றோர்களும் விரும்பமாட்டார்கள் என்று கூறினார்.  இந்த தொலைக்காட்சி கல்வி என்பது அனைவருக்கும் பிரச்சனையாய் இருக்காது. ஆனால் இது போன்ற வசதிகள் இல்லாமல் ஒரு குழந்தை படிக்கவில்லை என்ற சூழலை நாம் உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆன்லைன் வகுப்புகள் அல்லது தொலைக்காட்சி கல்வி என்று ஒரு முடிவை அரசு எட்டுவதற்கு முன்பாக பள்ளிக் கல்வித்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறையும் இணைந்து இந்த பகுதி மாணவர்களுக்கு “அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதிகள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?” என்று ஆலோசனை மேற்கொண்டு இலவசமாக பஞ்சாயத்து டிவிகள் அல்லது ஸ்மார்ட்போன்கள் கொடுப்பது குறித்து முடிவு எடுக்கலாம். இல்லையென்றால் விடுபட்ட பாடங்களை படிப்பதிலும் நிச்சயம் சிக்கல்கள் எழும். அது அவர்களுக்கு மேலும் அழுத்தத்தை தரும்.