இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 85% பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் கொரோனாவால் 7,93,000 பேர் பாதிக்கபட்டுள்ளதோடு 21,604 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ள மத்திய அரசு, தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நாடுமுழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 85% பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
- இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 10% பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இந்த வயதுடையவர்களில் கொரோனாவால் இதுவரை 53 சதவீதத்தினர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் நாட்டின் மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் உள்ளனர். அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 85 சதவீதம் பேர்.
- 60 முதல் 74 வயதிற்குட்பட்ட மக்கள், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதத்தினர். இருப்பினும், அதில் கொரோனாவால் 39 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.
- 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தியாவின் மக்கள் தொகையில் 2 சதவீதத்தினராக உள்ளனர், அதில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 14 சதவீதம் பேர்.
- 14 வயதிற்குட்பட்டவர்கள் இந்திய மக்கள்தொகையில் சுமார் 35 சதவீதத்தினர் உள்ளனர். இதில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே கொரோனாவல் உயிரிழந்துள்ளனர்.
- மக்கள்தொகையில் சுமார் 18 சதவீதம் பேர் 15-29 வயதிற்கு உட்பட்டவர்கள், இதில் 3 சதவீதம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
- அதேபோல நாட்டின் மக்கள்தொகையில் 22 சதவீதம் 30-44 வயதுக்குட்பட்டவர்கள், இதில் கொரோனாவால் இறந்தவர்கள் 11 சதவீதம் பேர் என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சிகிக்கை பெற்றுவருவோருக்கும், குணமடைந்தவர்களுக்குமான இடைவெளி 2,06,588 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.