பருவமழை காலம் தொடங்கி விட்டது. மாறும் காலநிலையால் நமது உடல்நலம் மட்டுமல்லாமல் சருமத்திலும் பாதிப்புகள் ஏற்படும். நாம் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதுவும் கொரோனா தாக்கத்தால் பெரும்பாலானோர் வீடுகளுக்குள்ளேயே இருக்கும் இந்த சமயத்தில் நமக்கு போதிய நேரம் கிடைக்கிறது. உடல்நலத்திற்காக நாம் சத்துள்ள விதவிதமான உணவுகளை எடுத்துக் கொள்ளும் நேரத்தில், நமது சருமத்தையும் பராமரிக்க மறந்து விடக் கூடாது. மழையை ரசித்துக் கொண்டு இருக்கும் நீங்கள், அந்த ஈரப்பதத்தால் உங்கள் சருமம், தலைமுடி சேதமடையும் என்பதை மறந்துவிடாதீர்கள். வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இயற்கையான முறையில் Face scrubs எவ்வாறு தயாரிப்பது என்பதை இங்கு காண்போம். இதற்கு நீங்கள் சில நிமிடங்கள் செலவழித்தால் போதும்.
காஃபி மற்றும் தேங்காய் எண்ணெய்:
உங்கள் சருமத்தை பராமரிப்பதில் காஃபி பவுடர் முக்கியமான ஒன்று. ஒரு டேபிள் ஸ்பூன் காஃபி பவுடர் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்து ஸ்க்ரப் செய்வதற்கான பதத்தில் தயார் செய்யுங்கள். பின்னர் அதனை எடுத்து மசாஜ் செய்வது போல முகத்தில் மெதுவாக தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் சருமத்திற்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும். சருமம் சேதமடையாமல் பாதுகாக்கலாம். இதனை தினமும் கூட செய்யலாம்.
பேக்கிங் சோடா மற்றும் Cleanser:
இந்த ஸ்க்ரப்பை தயாரிக்க ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் நீங்கள் பயன்படுத்தும் Face Cleanser ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் மெதுவாக தடவி சருமத்திற்கு தேவையான புத்துணர்ச்சியை கொடுங்கள். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இந்த முறை நல்ல பலனை தரும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டும் இதனை செய்து கொண்டால் போதுமானது.
நாட்டு சர்க்கரை மற்றும் தேன்:
ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் பிரவுன் சுகர் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து ஸ்க்ரப் செய்தால் சருமத்தை நன்றாக பராமரிக்க முடியும். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்யை அகற்ற உதவும். இதன் மூலம் உங்கள் சருமத்திற்கு இயற்கையான ஒரு ஈரப்பதம் கிடைக்கும்.
ஒவ்வொருவரது சருமமும் வித்தியாசமானது. அதனால் இந்த பராமரிப்பு முறைகள் அனைவருக்கும் பொருந்தும் என கூற முடியாது. அதனால் நீங்கள் இதுபோன்ற டிப்ஸ்களை முயற்சித்து உங்கள் சருமத்திற்கு எது சிறந்ததோ அதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற ஸ்கரப்களை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். மெதுவான ஒரு மசாஜ் செய்து முகத்தை கழுவிய பிறகு உங்கள் சருமம் புத்துணர்ச்சி அடைவதை உங்களால் உணர முடியும்.