கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் ஆந்திர மாநிலத்தில் அதிரடியான சேவை ஒன்றை துவங்கி வைத்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. ஆந்திரமாநிலம் விஜயவாடா பென்ஸ் கூட் ரோட்டில் 1088 ஆம்புலன்ஸ்களுக்கான சேவையை கொடியசைத்து துவங்கி வைத்தார்.
இதற்காக ரூ. 201 கோடி நிதி செலவிடப்பட்டது. ஆரம்பத்தில் ஆந்திராவில் 1,19,545 பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற அளவில் இருந்த நிலையில் தற்போது, 74,609 பேருக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்த ஆம்புலன்ஸ்களில் 26 வாகனங்கள் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நகர்புறங்களில் இருக்கும் நபர்கள் 108 எண்ணிற்கு அழைத்து அவசரவாகன சேவையை பெற்றுக் கொள்ளலாம். கிராமப்புறங்களில் வசிக்கும் நபர்கள் 104 எண்ணிற்கு அழைத்து ஆம்புலன்ஸ் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
தேசிய மருத்துவர்கள் தினத்தில் இந்த நிகழ்வினை நடத்திய ஆந்திர மாநில முதல்வர் குண்டூர் ஜி.ஜி.ஹெச். மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்கான பிரிவினை காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார். ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகரித்துள்ளதால் விலைமதிப்பில்லா உயிர்களை காப்பாற்ற இயலும் என்று கூறினார். மேலும் 108 மற்றும் 104 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓட்டும் நபர்களின் சம்பளத்தை ரூ. 18 ஆயிரத்தில் இருந்து ரூ. 28 ஆயிரத்திற்கு உயர்த்தி அறிவித்துள்ளார்.