வியாழன், 2 ஜூலை, 2020

ரயில் நிலையங்களில் கொரோனா அறியும் கேமரா

 இந்திய ரயில்வே செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட கோவிட் கண்காணிப்பு கேமராக்களை (Artificial Intelligence (AI)-based ‘COVID surveillance’) நிறுவ உள்ளது. இந்த கேமராக்கள் உடல் வெப்பநிலை மற்றும் ஒரு நபர் முககவசம் அணிந்துள்ளாரா இல்லையா என்பதையும் கண்டறியும். ரயில் நிலையங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள் கூடும் பகுதிகளில் இது போன்ற கேமராக்களை நிறுவ முடிவு செய்து அவற்றை வாங்குவதற்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. இந்திய ரயில்வேயின் ஒருசில மண்டலங்கள் இதுபோன்ற கேமராக்களை ஏற்கனவே வாங்கிவிட்டன, மும்பை போன்றவை. இந்த வகை கேமராக்கள் அடுத்த கட்ட நோய் கட்டுப்பாட்டு உத்திக்காகவும், நாட்டில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் போது அதற்கு ஈடுக்கொடுத்து செல்வதற்கும் உதவும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், “கருப்பு உடல்”(“black body”) வெப்பநிலை என அழைக்கப்படுகிற ஒரு முக்கியமான விவரக்குறிப்பு (specification) இந்திய ரயில்வேயால் கோவிட் கண்காணிப்பு கேமராக்களில் விலக்கப்பட்டுள்ளது.

கருப்பு உடல் உணர்திறன் ஆற்றல் கொண்ட ஒரு கேமராவின் விலை ரூபாய் 4 லட்சத்துக்கும் அதிகமாகும், ஆனால் இந்த அம்சம் இல்லாத கேமராவின் விலை இதில் பாதி அளவு தான் வரும். இந்திய ரயில்வேயின் தொலைத்தொடர்பு பிரிவான RailTel இதுபோன்ற 800 கேமராக்களை வாங்க ஒப்பந்த புள்ளிகளை கோரியுள்ளது. முதலில் Railtel இந்த கருப்பு உடல் உணர்திறன் அம்சத்தை ஒரு விவரக்குறிப்பாக சேர்க்கவில்லை ஆனால் அதை இப்போது சேர்த்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக மும்பை மற்றும் கவ்காத்தியில் உள்ள பெரிய ரயில் நிலையங்களில் இது போன்ற கேமராக்களை பொருத்த மத்திய ரயில்வே மற்றும் வடக்கு Frontier ரயில்வே மண்டலங்களால் கோரப்பட்ட ஒப்பந்த புள்ளிகளில் கருப்பு உடல் வெப்ப நிலையை கண்டறியும் திறனைக் கொண்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் கோரப்பட்டுள்ளன. ஆனால் அதே நேரம் வடக்கு, தென்மேற்கு மற்றும் தெற்கு ரயில்வே மண்டலங்களால் கோரப்பட்டுள்ள ஒப்பந்த புள்ளிகளில் இந்த அம்சத்தை அவர்களின் விவரக்குறிப்புகளில் சேர்க்கவில்லை.

இரண்டு வகையான கண்காணிப்பு கேமராக்களும் நோக்கத்தைப் பொறுத்து ஏற்றுக் கொள்ளப்படும், என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதிகப்படியான மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கருப்பு உடல் அம்சத்துடன் கூடிய ஸ்கேனர்கள் உகந்தது. சாதாரண கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கருப்பு உடல் அம்சம் இல்லாத ஸ்கேனர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கது. கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளில் சிறந்த தேவைகள் மற்றும் தீர்வுகளை கருத்தில் கொண்டு மண்டல நிலைகள் அனைத்து முடிவுகளையும் எடுத்தன. இரண்டு விதமான கேமராக்களும் ஆற்றல்மிக்கது மற்றும் நல்லது, என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.