திங்கள், 13 ஜூலை, 2020

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சியில் வகுப்பு: இது எப்படி சாத்தியம்?

அரசு பள்ளி மாணவர்களுக்கு வரும் 13-ஆம் தேதிக்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார். ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவைப்படும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப அணுகல் குறித்த கேள்வி பெற்றோர்களிடம்,கல்வியாளர்களிடம் எழுந்தது.   இதனையடுத்து, “தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை,  டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம்” என்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று விளக்கமளித்தார்.

தனியார் தொலைக்காட்சிகளின் வழியே பாடங்கள் நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டாலும், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் மூலம்  பாடத்திட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடும் என்று தெரிய வருகிறது.

கொரோன பொது முடக்கநிலையாள தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், கல்விக்கும், மாணவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. மாணவர்களின் குடும்பப் பொருளாதாரம் மற்றும் உடல்நிலை போன்ற காரணங்களால் தமிகழத்தில் ஏற்கனவே இடைநிற்றல் விகிதம் அதிகம். அந்த வகையில், மாணவர்களுக்கு குறிப்பாக ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடர வேண்டும் என்று தாய்த் தமிழ் பள்ளி பேராசிரியா் பிரபா கல்விமணி தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், ” 45 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதில் எத்தனை பேரிடம் தொலைக்காட்சி அணுகல் உள்ளன என்பது  குறித்த தகவல் தெளிவாகத் தெரியவில்லை. கல்வி  தொடர்பான  தொலைக்காட்சி ஒளிபரப்பை ஒவ்வொரு மாணாக்கர்களிடம் கொண்டு செல்வது சமூகத்தின் பங்கு.
அனைத்து வகையான சமூகத்தையும் உள்ளடக்கிய மாற்று அணுகுமுறையை செயல்படுத்து முக்கியம்” என்று தெரிவித்தார்.

விழியன், செந்தமிழ் செல்வன் போன்ற கல்வியாளர்கள் வகுத்த நுண் வகுப்பறைகள் திட்டத்தை முன்வைத்து பேசிய அவர்,”பாடப்புத்தகத்தை அடிப்படையாக இல்லாமல், சில கற்றல் அடைவுகளை சில செயல்பாடுகள் மூலமும், உரையாடல் மூலமும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த இந்த திட்டம் முனைகிறது. இந்த திட்டத்தின் கீழ்,  மாணவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தன்னார்வலர் வீடு, பொது இடம் போன்றவற்றில் சமூக விலகல் நெறிமுறையுடன்  ஒன்று முதல் ஐந்து மாணவர்கள் எண்ணிக்கையில் வகுப்பினை தன்னார்வலர்கள் கொண்டு நடத்தலாம். சத்துணவினையும்  இந்த மையங்களில் மாணவர்களுக்கு வழங்கலாம்.  உள்ளூர் தொலைக் காட்சிகளின் மூலம் ஒவ்வொரு தொகுப்பு மாணவர்களுக்கும் ஒவ்வொரு நேரத்தில் வகுப்புகள் ஒளிபரப்பப்படும்”  என்றார்.

மேலும், ” எங்களின் தாய்த் தமிழ் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பட்டியலையும் தெருவாரியாக  தொகுத்ததில் மொத்தம் 13 தெருக்கள் அடையாளம்  காணப்பட்டது. ஒவ்வொரு  தெருவிலும் மாணவர்களுக்கு உணவு அளிக்கவும், ஆசிரியர் – மாணவர் சந்திப்பு நடத்தவும் ஒரு சந்திப்பு மையம்  (வீடு) தேர்வு செய்யப்பட்டுள்ளது . ஒரு சந்திப்பின் போது  அதிகபட்சமாக 10 மாணவர்கள்  மட்டும்  தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்  சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சந்திப்பு மையத்திற்கும் வரவேண்டிய  மானவர்கள், ஆசிரியர்கள் பட்டியல்  தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மதிய உணவு வழங்குவதற்காக உடனிருந்து உதவி செய்ய  முன்வந்துள்ள 20 பெற்றோர்களின் பெயர்களும்  தயாரிக்கப்பட்டுள்ளன.

தெருவோரமாக திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு மையங்களில் மாணவர்களை அழைத்து , சந்தித்து, அவர்களின் உடல் மற்றும் மன நலனை சில நிமிடங்களுக்கு கேட்டறிந்து உணவுகள் வழங்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்