சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு பரிந்துரை செய்தது. இந்த நிலையில் டெல்லி சி.பி.ஐ. கூடுதல் எஸ்பி., விஜயகுமார் சுக்லா தலைமையிலான 8 சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் வியாபாரிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையானது தொடர்ந்து ஏழு மணி நேரம் நடைபெற்றது. அந்த விசாரணையில் ஜெயராஜின் மனைவி, அவரது மகள்கள் பேர்சி பியூலா, அபிஷா மற்றும் அவர்களது உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றைய தினம் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விஜயகுமார் சுக்லா தலைமையிலான 6 சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சாத்தான்குளம் காவல் நிலைய வளாகம், காவல் நிலையத்தில் மேல்மாடி, காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் கைதிகள் அறைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மாலை 5 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 8 மணி வரை 3 மணி நேரம் நடந்தது.