இந்திய தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளில் சீன நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கப் போவதில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த இந்திய மக்கள், சீனாவுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்ற முழக்கம் வலுத்து வருவதுடன், அதனை பிரபலங்கள் உள்பட பலரும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளதாக டிக்டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளின் பயன்பாட்டிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் தனித்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ சீன நிறுவனங்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார். இதேபோல் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சீன முதலீட்டாளர்களுக்கு இடமில்லை என்பதை அரசு உறுதி செய்யும் என்றும் கூறியுள்ளார்.
நெடுஞ்சாலைத் திட்டங்களில் இந்திய நிறுவனங்கள் பங்கேற்கும் வகையிலும், சீன நிறுவனங்கள் பங்கேற்பதை தடை செய்யும் வகையிலும் புதிய விதிமுறைகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள் ஊக்குவிக்கப்படும் அதே நேரத்தில் சீனாவிற்கு அது பொருந்தாது என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா அல்லது ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தை அடைவதற்கான ஒரு படிதான் இந்த முடிவு என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.