ஹரியானாவில் ஜூலை 27ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் என மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. செல்போன், இணைய வசதி இல்லாத இடங்களில் உள்ள மாணவர்களின் கல்வி குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர். ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இரண்டாவது கட்ட தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு பள்ளி, கல்லூரிகளை ஜூலை 31ம் தேதி வரை திறக்கக் கூடாது என உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜூலை 27ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஹரியானா அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1 முதல் ஜூலை 26ம் தேதி வரை கோடை விடுமுறை என்றும், 27ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் மாநில பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஜூலை 31ம் தேதி வரை திறக்கப்படாது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கின் போது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் வழங்கப்படுகிறதா, இல்லையா என்பதை பொருட்படுத்தாமல் கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் உரிமை தனியார் பள்ளிகளுக்கு உள்ளது என பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அதேசமயம் 2020-21ம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை அதிகரிக்க கூடாது என்றும் கூறியிருந்தது. இதனையடுத்தே ஹரியானா பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.