திங்கள், 6 ஜூலை, 2020

பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழை!

வட மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளை வெள்ளநீர் ஆக்கிரமித்துள்ளதால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

திரும்பிய திசையெல்லாம் வெள்ளம்.சாய்ந்து கிடக்கும் மரங்கள்.சாலைகள் அனைத்தும், ஆறுகளை போல் காட்சியளிக்கும் நிலை.. ஆர்பரித்து பாயும் ஆறுகள். வட இந்தியாவில் பல மாநிலங்களின் தற்போதைய நிலை இது தான்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை மாநகரின் நிலை தான் நீங்கள் பார்க்கும் இந்த காட்சிகள். மும்பையின் போஸ்டல் காலனி, சக்கார் பஞ்சாயத்து ரோடு, நீலம் ஜங்சன் என பலப்பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்து கிடக்கின்றன. மும்பையின் முக்கிய பகுதியான நவி மும்பையில் 12 மணி நேரத்தில் 20 செமீ மழை பெய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் நேற்று 28 செமீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர். வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. தண்டவாளங்களில் நீர் தேங்கி உள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தலைநகர் டெல்லியிலும் கனமழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று காற்றும் அதிக வேகத்தில் வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

பீகார் மாநிலம் பாட்னாவிலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீதிகளில் வெள்ளம் அதிக அளவில் காணப்படுவதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மரங்கள் முறிந்து விழுந்ததால், தரம்சாலாவில் இருந்து சிம்லா செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனை அடுத்து அங்கு மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 

இதே போன்று மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கங்கை பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகள் அபாயகட்டத்தை நெருங்குவதால் அதன் கரையோர மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.