கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கால், தமிழகம் முழுமையாக ஸ்தம்பித்தது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பதால், மாநிலம் முழுதும் நேற்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தலைநகர் சென்னை உட்பட மாநகரங்கள், நகரங்கள், கிராமங்கள் என அனைத்தும் அமைதிப் பூங்காவாக மாறியது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை மாநகரின் முக்கிய வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. சென்னையில் தளர்வில்லா முழு ஊரடங்கு எவ்வாறு அமலில் இருக்கிறது என்பதை நேரில் ஆய்வு செய்த மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தளர்வில்லா முழு ஊரடங்கிற்கு மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் தெரிவித்தார்.
சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக செங்குன்றம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆந்திர - தமிழக எல்லையான எளாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கினை கண்காணிக்க 1,500 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கிய சோதனைச்சாவடிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தீவிர வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆந்திர தமிழக எல்லையில் இருந்து அத்தியாவசிய பொருட்களைக்கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
கோவையில் காய்கறிகள் கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கோவை மாநகர வீதிகளும் முக்கிய சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 25 தடுப்பு சோதனை சாவடிகள் ஏற்படுத்தபட்டு ஊரடங்கை மீறி வெளியில் வருவோர் கண்காணிக்கப்பட்டனர். 25 நான்கு சக்கர வாகனங்கள் மூலமும் 44 இரு சக்கர வாகனங்கள் மூலமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் மாநகராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான கண்காணிப்பு பணியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். ஈரோட்டில் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், அவசர தேவையின்றி வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அனைத்து பிரதான சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அரசு உத்தரவை மீறி பொது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், சேலம் மாநகர காவல்துறையினர் அஸ்தம்பட்டி, 5 ரோடு சந்திப்பு, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட மாநகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேநீர் கடைகள், காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள், இறைச்சி கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. வாகனங்கள் இயக்கப்படாததாலும், மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
திருவாரூரில் உள்ள மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர்த்து மற்ற கடைகள் மூடப்பட்டதால் நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல், முழுஊரடங்கு காரணமாக தஞ்சையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. தடை உத்தரவை மீறி வெளியே வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். தளர்வில்லா முழு ஊரடங்கு காரணமாக நாகப்பட்டினத்தில் இன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. முழுஊரடங்கால் நாகப்பட்டினம் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்ட காட்சிகளை நியூஸ்7 தமிழ் பருந்து பார்வையில் பதிவு செய்தது. அந்த காட்சிகள் உங்களுக்காக.