சனி, 4 ஜூலை, 2020

தேவை பயமுறுத்தல் அல்ல, விழிப்புணர்வு

முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்

ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிக்கு, அவர் கொடுக்கும் மருந்து, மாத்திரையை விட, நோயாளிக்குக் கொடுக்கும் ஆறுதலான வார்த்தைகளே, அவருக்கு தன்னம்பிக்கையை அளித்து பாதி நோயைக் குணப்படுத்தி விடும் என்பதுதான் உண்மை. அதைப் போன்று இந்த நேரத்தில் கொரோனா பற்றிய அச்ச உணர்வை அதிகமாக மக்கள் மனதில் விதைக்காமல், அவர்களுக்கு நல்ல விழிப்புணர்வைக் கொடுத்து, அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது இருட்டுக்கடை அல்வா. நூறு ஆண்டுகளைக் கடந்து மூன்றாவது தலைமுறையாக அந்தக் கடையை நடத்தி வந்தவர் ஹரிசிங் அவர்கள். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருநெல்வேலியிலுள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நடத்தப்பட்டப் பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் பெரும் அதிர்ச்சியடைந்த அவர், தன்னால், இனி தனது கடையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், தனது வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், தன்னிடம் அல்வா வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் இந்தத் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில், அதே ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துள்ளார்.

இந்தத் தற்கொலைச் சம்பவம் தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பையும், மக்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று பாதித்தால் மரணம் நிச்சயம் என்ற மனநிலைக்கு மக்கள் வருகின்றனர். அதைப்போன்று வீட்டிலுள்ள ஒருவருக்கு அல்லது ஓர் இடத்திலுள்ள ஒருவருக்கு இந்தத் தொற்று வந்தால் அந்த இடத்திலுள்ள அனைவருக்கும் தொற்று பரவும் என்ற ஒரு தவறானத் தகவலைப் பரப்பி மக்களை அச்சத்தில் உறைய வைக்கின்றனர்.

ஆனால், உண்மை அதுவன்று. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்றுப் பாதித்தவர்களில் பத்து சதவீதம் பேர் மட்டுமே உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். அவர்களிலும் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், ஏற்கனவே சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், நரம்பு மண்டல மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மட்டுமே இறப்பதற்கு வாய்ப்புள்ளது. மற்றவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று நம்பிக்கையோடு கூறுகின்றார்கள். இந்த உண்மை நிலை இன்றுவரை மக்கள் மத்தியில் கொண்டுச் செல்லப்படவில்லை.

இதனை அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வாக முழுமையாக எடுத்துச் சென்றால், இதுவரை மக்கள் மத்தியில் கொரோனா மரணம் பற்றி தொற்றிக் கொண்டிருக்கும் அச்சம் நீங்கி, இது போன்ற தற்கொலைகள் நடக்காமல் தடுப்பதற்கு முடியும்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றையும் மீறி முதியவர்கள் கூட இந்த நோய் தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக, கேரள மாநிலத்தில் 93 வயதான முதியவரும், 88 வயதான அவரது மனைவியும், இத்தாலியில் வசிக்கும் தங்களின் பிள்ளைகளைச் சந்தித்து விட்டு கொரோனா தொற்றுடன் வந்துள்ளனர். ஆனால், கொரோனா சிகிச்சைக்குப் பிறகு இருவரும் குணமடைந்து, இப்போது நலமுடன் உள்ளனர். இதற்கும் சவால் விடும் வகையில் கர்நாடக மாநிலத்தில் 99 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று உறுதியாகி, பெங்களூரு, அரசு ஆஸ்பத்திரியில் ஒன்பது நாள்கள் சிகிச்சைப் பெற்று நல்ல முறையில் குணமடைந்து, அனைவரையும் ஆச்சரியமூட்டும் விதத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார்.

அந்த மூதாட்டி தான் குணமடைந்ததைப் பற்றிக் கூறும் போது, “நான் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதற்குக் காரணம், நான் மன தைரியத்துடன் இருந்து, டாக்டர்கள் அளித்த மருந்துகளை அவர்களின் அறிவுரைப்படி எடுத்துக் கொண்டேன்” என மிகவும் ஐஸ்வர்யமானப் புன்னகைத் ததும்பும் முகத்துடன் கூறியுள்ளார். இதைப் போன்ற தன்னம்பிக்கையூட்டும் விழிப்புணர்வுதான் இபோதைக்கு மக்களுக்கு மிகவும் அவசியமாக வேண்டியுள்ளது.

மேலும், இதற்கு முன் இத்தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் போது, அந்த இடத்திலுள்ள அனைவருக்கும் தொற்று பரவி, அந்த சுற்றுவட்டாரத்தையே அழித்து விடும் என்ற பீதி மக்கள் மத்தியில் இருந்தது. அதால்தான், சென்னையில் டாக்டர் சைமன் இறந்த பிறகு இரண்டுக் கல்லறைத் தோட்டத்திலும் அவரை அடக்கம் செய்ய விடாமல் மக்கள் பெரும் பிரச்னைகளைக் கிளப்பினார்கள். மட்டுமின்றி சொந்தப் பிள்ளைகள் கூட தங்களின் தந்தையின் உடலை வாங்கி புதைப்பதற்குப் பயப்பட்டார்கள். ஆனால், இப்பொழுது தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை, அவர்களின் உறவினர்களே பெற்றுக் கொண்டு அடக்கம் செய்ய முன்வருகிறார்கள்.

ஆரம்பத்தில் ஒருவர் இந்தத் தொற்றினால் இறந்து போனால் அவர்களின் உறவினர்களுக்குக் கூட, அதாவது திருமணமான ஒருவர் இறந்து போனால், அவரது மனைவி, மக்களுக்குக் கூட அவரைக்காட்டாமல் சுகாதாரப் பணியாளர்கள் எடுத்துச் சென்று புதைத்து வந்தார்கள். ஆனால், சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொற்றினால் பலியான போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் உடலை அடக்கம் செய்வதற்குக் கொண்டு செல்வதற்கு முன்பு, அவரின் உற்றார் உறவினர்கள் சிலரைப் பார்ப்பதற்கு அனுமதித்துள்ளனர். அந்த நெஞ்சை உருக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவையெல்லாம் உரியப் பாதுகாப்புடன் செய்யப்படுவதால் மக்களுக்குள்ளேயிருந்த கொரோனா பற்றிய அச்ச உணர்வுகளைப் போக்கி, அவர்களிடத்தில் ஒருவித விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இவற்றையெல்லாம் விட மக்களிடையே தற்போது தொற்றிக் கொண்டிருக்கும் ஓர் அச்ச உணர்வு என்னவென்றால், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனைக்கோ அல்லது சிகிச்சைக்கோ சென்றால் மிக அதிக கட்டணம் வசூலிக்கின்றார்கள் என்பதுதான். இதுவும் மக்களைப் பயங்கரமாகப் பீதியடையச் செய்துள்ளது. எனவே மக்களின் இந்த அச்சத்தை நீக்குவதற்கு, இத்தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள், அரசு அல்லது தனியார் ஆஸ்பத்திரிகளில் பரிசோதனை, சிகிச்சைப் பெற்றால் அதன் மொத்தச் செலவையும் அந்தந்தப் பாதிப்பாளர்களின் வருமானத்தின் அடிப்படையில் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், வெளி மாநிலம், வெளி மாவட்டத்திலிருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்துவதிலும் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவர்களைத் தங்க வைக்கும் இடங்களிலுள்ள மக்கள் அதற்குப் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மட்டுமின்றி பொது இடங்களில் தனிமைப்படுத்தும் போது அந்த இடங்களில் போதுமான அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லாமல் இருக்கின்றன. அங்கு அவர்கள் இரண்டு வாரங்களைக் கடத்துவதென்பது கொரோனாவை விடக்கொடுமையாக உள்ளது. இது தனிமைப்படுத்தப் படுவோருக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அதனால், தனிமைப்படுத்துபவர்களை, அவரவர்களின் வீட்டிலுள்ள வசதி வாய்ப்புகளைப் பொறுத்து, அந்தந்த பகுதியிலுள்ள சுகாதாரப் பணியாளர்களின் கண்காணிப்பில், அவரவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலாம். இதனால், வீணாகப் பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தைக் குறைக்கவும் முடியும் கூடவே தனிமைப்படுத்தப்படுவோரின் மன அழுத்தத்தையும் குறைக்க முடியும்.

இவற்றுடன் ஓர் இடத்தில் ஒருவருக்குத் தொற்று வந்தால், அவரை அங்கிருந்து ஆஸ்பத்திரியில் அனுமதித்து விட்டு, அந்தச் சுற்றுவட்டாரத்தில் மூன்றிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் வரை சீல் வைத்து, அந்தப் பகுதிக்குள் எவரையும் நுழைய விடாமலும், உள்ளே இருப்பவர்களை வெளியே விடாலும் பெரும் கெடுபிடிக் காட்டுவதும் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை எற்படுத்துவதோடு பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற கெடுபிடிகளே சில நேரங்களில் சாத்தான்குளம் போன்ற சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது.

எனவே கொரோனா பற்றிய இந்த அச்ச உணர்வுகளில் இருந்தெல்லாம் மாறி, மக்கள் ஒரு இயல்பான மனநிலைக்கு வருவதற்கும் அவர்களை அவர்களாகவே சுயமாகப் பாதுகாத்துக் கொள்வதற்கும் இன்னும் அதிகமான விழிப்புணர்வுகளைக் கொடுப்பதற்கு, அரசும், சுகாதாரத்துறையும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைத்தவிர்த்து, அச்ச உணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்திக் கொள்ள வேண்டும்.

இந்த கட்டுரையை எழுதியவர் முனைவர் கமல. செல்வராஜ்,
அருமனை. அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com