போதை பொருள் கடத்தல் தடுக்க இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பல்வேறு மாநிலங்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் வேலூர் பொம்மிகுப்பம் விஜயகுமார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் விஜயகுமார் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது மனைவி சித்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக மத்திய மாநில அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளது?, அந்த வழக்குகளிலிருந்து எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். போதைப்பொருள் நுகர்வோர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?, போதை பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணமா? எனக்கேட்டுள்ள நீதிபதிகள், மாணவர்களும், இளைஞர்களும் இந்த கடத்தலில் ஈடுபடுகிறார்களா என்று குறிப்பிட்டு விளக்கம் கேட்டுள்ளனர்.
அடர்ந்த காடுகளுக்கு உள்ளேயும் கண்காணிக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் காவல்துறையிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் போதைப்பொருள் கடத்தலை கண்காணிக்கவோ அழிக்கவோ ஏன் முடியவில்லை எனவும் நீதிபதிகள் வினவினர்.
மேலும் போதைப்பொருள் தொடர்புடைய வழக்குகள் மற்றும் குற்றங்களை கையாள ஏன் தனிப்பிரிவை உருவாக்க கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், இது குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.