வெள்ளி, 17 ஜூலை, 2020

ஆன்லைன்ல விண்ணப்பிங்க – பிடிச்ச கல்லூரியில படிங்க

தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்கள் இந்தாண்டு அரசு கலை & அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இஞ்ஜினியரிங் , மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மட்டுமே இதுவரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி இருந்துவந்த நிலையில் , தற்போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த ஆன்லைன் முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இவற்றில் சுமார் 92,000 இளநிலை வகுப்பு சேர்க்கை இடங்கள் உள்ளன. இதற்கு சுமார் 2 இலட்சம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

இதுபோன்று தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்பொழுது 51 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்குகள்) இயங்கி வருகின்றது. மற்றும் தொழில் வணிகத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கல்வி பாடத்திட்டத்திலும் வரக்கூடிய 3 இணைப்பு கல்லூரிகளையும் சேர்த்து மொத்த ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 16,890. இதற்கு தோராயமாக 30,000 மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.

பொதுவாக விண்ணப்பதாரர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பக் கட்டணங்களை வங்கி வரைவோலையாக இணைத்து தபாலிலோ நேரிலோ சமர்ப்பிப்பார்கள். இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது.

தற்போது முதல்வர் பழனிசாமியின் உத்தரவின்படி புதிய முயற்சியாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு தொ ழில்நுட்ப கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு www.tngtpc.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.