டீ பிரியர்களுக்கு அதில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியுமா? நமது ஆரோக்கியத்திற்கு டீ எவ்வளவு நல்லது என தெரியுமா? விதவிதமான டீ வகைகளையும் அதன் பயன்களையும் இதில் காண்போம்.
மசாலா டீ:
இந்தியாவில் ஏராளமானோர் விரும்பி குடிப்பது மசாலா டீ. இந்த ஒரு கப் தேநீரில் இலவங்கப்பட்டை, இஞ்சி, கிராம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது உங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் வளர்ச்சியை மாற்ற செயல்களுக்கும் உதவும். அதில் உள்ள இலவங்கப்பட்டை, கிராம்பு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக தற்போது உள்ள சூழலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது முக்கியமானது. இஞ்சி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அதே போல் இருமல், தலைவலி உள்ளிட்ட தொந்தவுகளில் இருந்து விடுபடவும் மசாலா டீ நல்ல பானம்தான்.
வெள்ளை டீ:
இது மற்ற டீ அளவுக்கு பிரபலமானது கிடையாது. ஆனால் இதில் மருத்துவ குணங்கள் அதிகம். தேயிலை மொட்டுக்கள் விரியும் முன்பே அதனை பறித்து தயாரிக்கப்படும் டீ ஆகும். அதனை வேகவைத்து அல்லது வறுத்தெடுத்த பிறகு உலர வைத்து பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள antioxidants உடல் செல்கள் வயதாவதை தடுக்க உதவும். வெள்ளை டீ இதயத்திற்கும் நன்மை பயக்கும். இதுமட்டுமல்லாமல் எடை குறைக்கவும் இது உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோயை தடுக்கும் பண்பு, இந்த வெள்ளை தேநீருக்கு உள்ளதாக கூறுகின்றனர்.
கிரீன் டீ:
சிலர் எலுமிச்சை சாறுடனும், சிலர் தேனுடன் கிரீன் டீயை குடிக்கிறார்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துபவர்கள் பலரும் கிரீன் டீக்கு மாறி வருகின்றனர். மேம்பட்ட மூளை செயல்பாடு, அதிக எடை, சுவாச பிரச்னைகள், நீரிழிவு நோய் உள்ளிட்டவற்றிற்கு தீர்வாக கிரீன் டீ உள்ளது. அதே போல் இதயம் சம்பந்தமான நோய்களுக்கும் இது நல்ல பலனை கொடுக்கும்.
மூலிகை டீ:
உடலுக்கு நலன் பயக்கும் மூலிகைகள், மசாலா பொருட்கள் மற்றும் சில தாவர பொருட்கள் மூலம் மூலிகை டீ தயாராகிறது. மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பொருட்கள் உடல் அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்கின்றன. சில சமயங்களில் குமட்டல் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடவும் மூலிகை டீ உதவும் என கூறுகின்றனர்.
பிளாக் டீ:
பெரும்பாலானோருக்கு பிளாக் டீ என்றால் மிகவும் பிடிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் பெண்களுக்கு பெருந்தமனி தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன. அதே போல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்றுவதற்கும் இது நல்ல பலன் அளிக்கும் என கூறுகின்றனர். குடலில் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் இது உதவும். அதே நேரத்தில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை குறைப்பதற்கும் பிளாக் டீ எடுத்துக் கொள்ளலாம் என கூறுகின்றனர்.