பிளாஸ்மா தானம் செய்வது தேசிய இயக்கமாக மாறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், பிளாஸ்மா தானம் அளிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும் நோக்கில், டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 26 பேர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பிளாஸ்மா தானம் பெறுவதன் மூலம், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அவை பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். இதன் மூலம்,அவர்களை விரைவாக குணப்படுத்த முடியும் என்றும் ஹர்ஷ் வர்தன் குறிப்பிட்டார். பிளாஸ்மா தானம் அளிக்கும் காவலர்களை ‘பிளாஸ்மா வாரியர்ஸ்’ என பாராட்டிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், பிளாஸ்மா தானம் அளிப்பது தேசிய அளவில் இயக்கமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கொரோனா வைரசுக்கு இந்தியாவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் மருந்து கண்டுபிடித்து இருப்பதையும், அந்த மருந்துகள் மனிதர்களிடம் சோதிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டிய ஹர்ஷ் வர்தன், எனினும், இந்த சோதனைகள் எப்போது முடிவுக்கு வரும் என்பதை ஊகிக்க முடியாது என தெரிவித்தார்.