புபோனிக் பிளேக் நோய் அதிக ஆபத்தை ஏற்படுத்தாது என கருதுவதாக என உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் இரண்டு பேருக்கு புபோனிக் பிளேக் நோய் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால் சீனாவின் பயன்னூர் மற்றும் மங்கோலியாவின் சில பகுதிகளில் மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னதாக, அங்கு கடந்த நவம்பர் மாதம் 4 பேருக்கு பிளேக் நோய் கண்டறியப்பட்டிருந்தது.
புபோனிக் பிளேக் என்பது பாக்டீரிய நோய். இது மர்மோட் போன்ற காட்டில் வாழும் கொறித்து திண்ணும் உயிரினங்களால் பரவுகிறது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், பாதிக்கப்பட்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் மனிதர்கள் மத்தியில் அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சீனாவில் கண்டறியப்பட்டுள்ள புபோனிக் பிளேக் நோய் பரவாமல் தடுக்க நடவடிகை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது அதிக ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என கருதுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செய்திதொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கூறுகையில், ‘சீனாவில் ஏற்பட்டுள்ள புபோனிக் பிளேக் நோய் பாதிப்பை உலக சுகாதார அமைப்பு கண்காணித்து வருகிறது. மங்கோலிய அதிகாரிகளுடன் இணைந்து இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
இந்த நோய் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என நாங்கள் கருதவில்லை. இருப்பினும் கவனமாக கண்காணித்து வருகிறோம்’ என்றார். இடைக்காலங்களில் இந்த நோய் “Black death’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.