புதன், 8 ஜூலை, 2020

மகாபாரதப் போரை விட கடினமானது கொரோனா போர்: சிவசேனா கருத்து!

கொரோனாவுக்கு எதிரான போரானது, மகாபாரதப் போரை விடக் கடினமாக நீண்டு கொண்டே போவதாக சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 3-வது இடத்துக்கு வந்துள்ளது. நோய்ப் பரவலின் தாக்கமும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் மேலும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இது தொடர்பாக கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Image

அதில் கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெற்றி பெறுவோம் என்று பிரதமர் மோடி கூறியதை மேற்கோள் காட்டியுள்ள சிவசேனா, தற்போது 100 நாட்களை கடந்த பின்னும் போரும், நெருக்கடியும் தொடர்வதாக குறிப்பிட்டுள்ளது.  மேலும் நோய்க்கான தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் கொரோனா தொற்று நோய்க்கு எதிரான போர் 2021-ம் ஆண்டு வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் மூன்றாவது இடத்திற்கு இந்தியா வந்ததற்கு அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வல்லரசாக மாற வேண்டும் என்று கனவு காணும் ஒரு நாட்டில், 24 மணி நேரத்தில் 25,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாவது துரதிருஷ்டவசமானது என்றும் கூறியுள்ளது.

Image

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தற்போது ரஷ்யாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தியா, இதேநிலையில் போனால், உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. மகாபாரதப் போர் 18 நாளில் முடிவடைந்த நிலையில், கொரோனாவுக்கு எதிரான போர் 100 நாட்களைக் கடந்தும் நடந்து வருவதாக கூறியுள்ள சாம்னா கட்டுரை, தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கொரோனா வைரஸுடன் வாழ வேண்டியிருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் சிவசேனா ஆளும் மகாராஷ்டிர மாநிலம் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.