மாநில வணிக சீர்திருத்தங்கள் செயல் திட்டம் 2019-க்கான தரவரிசை பட்டியல்:
2019 -ல் ஒட்டுமொத்தமாக சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் பட்டியல் பின்வருமாறு
- ஆந்திர பிரதேசம்
- உத்தர பிரதேசம்
- தெலங்கானா
- மத்தியப் பிரதேசம்
- ஜார்க்கண்ட்
- சத்தீஸ்கர்
- இமாச்சல பிரதேசம்
- ராஜஸ்தான்
- மேற்கு வங்காளம்
- குஜராத்
நாட்டின் உள்பகுதிகளிலும், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் செய்வதை எளிதாக்கும் வகையில் தொழில் சீர்திருத்தங்களை செய்வதற்கு, குறிப்பிட்ட வணிக சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் எளிமையாக்கல் செயல்பாடுகளை ஆக்கப்பூர்வமாக செயல் படுத்தும் மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது.
2018-ஆம் ஆண்டு தர வரிசையில் 12-வது இடத்தில் இருந்த உத்திரபிரதேசம் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த தெலங்கானா மூன்றாவது இடத்திற்குச் சென்றுள்ளது.
பயனாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில், இந்தத் திட்டத்தின் கீழான செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
இந்த தரவரிசைப் பட்டியலில் தமிழகம் 14வது இடத்தைப் பெற்றது. பொருளாதாரத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக தமிழக அரசு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர் மட்ட குழுவை அமைத்தது.
பொது முடக்கத்தின் தாக்கம், சமூக விலகல் காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மத்திய அரசுடன் சேர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவைகளை இந்த குழு பரிந்துரைக்கும்.
பொருளாதார நடவடிக்கைகளை முடிக்கிவிடும் நோக்கில், தமிழக அரசு, 7-ந் தேதி முதல், மாவட்டங்களுக்கிடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தது. மேலும், அன்றைய தினத்திலிருந்து தமிழகத்திற்குள் இயக்கப்படும் பயணியர் ரயில் சேவைகளைத் தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.
இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட திருமதி நிர்மலா சீதாராமன், கட்டுமான அனுமதி, தொழிலாளர்களை முறைப்படுத்துதல், சுற்றுச்சூழல் பதிவு, எளிதாக தகவல் கிடைத்தல், இடம் கிடைத்தல், ஒற்றைச் சாளர முறை போன்றவை தர வரிசைப் பட்டியலுக்கான அளவு கோல்களாக கொள்ளப்பட்டன என்று தெரிவித்தார். மேலும், தரவரிசைக்காக மாநில வணிக சீர்திருத்தங்கள் செயல் திட்டத்தை அமல்படுத்துதலில் உயர்ந்த தரங்களை பராமரித்ததற்காகவும், மற்றும் தரவரிசைகளின் அளவீடுகளை மேம்படுத்தியற்காகவும், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையை நான் வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா அழைப்பு, தன்னம்பிக்கை இந்தியாவை உருவாக்கிறது. உலக அரங்கில் இந்தியாவை வலுவான நாடாக முக்கிய பங்காற்ற வைக்கும் என தரவரிசைப் பட்டியல் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர்
ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
மேலும், மாநில வணிக சீர்திருத்த செயல் திட்டத்தை அமல்படுத்துவதன் அடிப்படையிலான மாநிலங்களின் தரவரிசை அமைப்பு புதிய இந்தியாவின் பரிணாம வளர்ச்சியில் மிகவும் பொருந்தும். இது இந்தியாவில் வணிகம் செய்யும் அனுபவத்தை முற்றிலும் மாற்றும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் தெரிவித்தார்.