செவ்வாய், 8 செப்டம்பர், 2020

கிசான் திட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் - மு.க. ஸ்டாலின்

 கிசான் திட்ட முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் துறையில் தங்களுக்குக் கைப்பாவையாக உள்ள அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலமாக இந்த மோசடிகளை அ.தி.மு.க. அரசு தொடர்ச்சியாகச் செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி உதவித் திட்டத்தில் மட்டுமல்ல, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதியிலும் மாபெரும் ஊழல் நடந்தது பற்றி சில வாரங்களுக்கு முன் ஆதாரப்பூர்வமான செய்திகள் வெளியானதை சுட்டிக்காட்டியுள்ளார். இறந்தவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, பண மோசடி நடந்துள்ளது. வீடு கட்டப்படவில்லை. இதுபோலவே, உயிரோடு இருப்பவர்கள் பெயரிலும் மோசடி நடந்துள்ளதாக சாடியுள்ளார்.

ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் இலாபம் தேடும் போக்கை மேற்கொண்டால் ஊழல் ஒழிந்துவிடுமா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் மறந்து விட்டதாக நினைக்கிறார்கள்; இவை போன்ற காரியங்களை மக்கள் ஒருபோதும் மறப்பதுமில்லை; மன்னிப்பதுமில்லை என்றும், நேரம் வரும் போது தண்டித்துவிடுவார்கள் என்றும் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.