டெல்லியை சேர்ந்த ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பிறகு 9 முறை பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.
டெ;ல்லியில் வசிக்கும் தப்ரெஸ் கான் என்பவர் கடந்த மார்ச் 18ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் ஏப்ரல் 5ம் தேதி கொரோனாவில் இருந்து மீண்டு வந்து வீடு திரும்பினார். பின்னர் பிளாஸ்மா தானம் பற்றி கேள்விப்பட்ட பிறகு, மற்றவர்களுக்கு உதவும் வகையில் தானும் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அதற்காக பிளாஸ்மா தானம் செய்துள்ளார். இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், அவர் ஒன்பது முறை பிளாஸ்மாவை தானம் செய்துள்ளார் என்பதுதான்.
தனது அனுபவம் தொடர்பாக பகிர்ந்து கொண்ட அவர், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியான பிறகு குடும்பத்தினரை நினைத்து கவலைப்பட்டேன். நான் உயிருடன் இருப்பேனா இல்லையா என அச்சமடைந்தேன். அப்போது மருத்துவர்கள் எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக நடந்து கொண்டார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக யோகா செய்ய தொடங்கினேன். கொரோனா உறுதியான பிறகு சமூகம் என்னை புறக்கணித்ததை உணர்ந்தேன். துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தை எப்போதும் மறக்க முடியாது.
அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்மா தானம் செய்து வருகிறேன். என்னை போல் மற்றவர்களும் இதில் இருந்து மீண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். ஒன்பது முறை பிளாஸ்மா தானம் செய்துள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு உயிரைக் காப்பாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது உடலில் ஆண்டிபாடிகள் இருக்கும் வரை இந்த சேவையை தொடர்ந்து செய்வேன். இதேபோல் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.