தமிழக சட்டமன்றம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் சபாநாயகாரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசியல் நெருக்கடி குறித்து அவசரமாக விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இந்நிலையில், ஒரு முக்கியமான கேள்வி கேட்கப்படுகிறது. திமுக எம்.எல்.ஏக்கள் 89 பேர் உள்ளனர். காங்கிரஸ் 8, முஸ்லீம் லீக் 1 உள்ளனர். அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி, கருணாஸ் இருவரும் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். எனவே, திமுக, காங்கிரஸ், லீக், கருணாஸ், அன்சாரி ஆகியோரின் எம்.எல்.ஏ கூட்டுபலம் 100. தற்போது, 18 எம்.எல்.ஏக்கள் தகுநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மொத்தக்கூட்டத்தொகை 118. அதாவது, மொத்தமுள்ள 234 தொகுதி என்பதில் இந்த 118 என்பதுதான் பெரும்பான்மை ஆகும்.
எனவே, திமுக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்தால் ஆட்சி கலையுமா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
இதுகுறித்து, வழக்கறிஞர்களிடமும், சட்ட வல்லுநர்களுடனும் நியூஸ்7 தொலைக்காட்சி சார்பாக கேட்கப்பட்டது. அதற்கு, இந்திய அரசியல் அமைப்புச்சட்டப்படி எதிர்க்கட்சிகள் இல்லாத சட்டமன்றம் ஒன்று இருக்கக்கூடாது என்று எந்த விதியும் இல்லை. எனவே, திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் அரசுக்கோ, சட்டமன்றத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இப்போது உள்ள எடப்பாடி பழனிசாமி அரசு அப்படியே தொடரும். சட்டமன்றத்தை நீக்கவோ அல்லது ரத்த செய்யவோ எந்த அவசியமும் இல்லை என்கின்றனர்.
ஆனால், திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தால் அரசியல் ரீதியாக ஒரு அழுத்தம் ஏற்படும் என்றும், இந்த பிரச்னையை கவனப்படுத்த உதவும் என்றும் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேநேரம், திமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வது ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை என்றும், ஒருவேளை தேர்தல் வராமல் போனால் சட்டமன்றத்தில் அதிமுக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிடும் என்றும் எச்சரிக்கின்றனர்.