வியாழன், 10 ஜனவரி, 2019

மாநிலங்களவையில் நிறைவேறியது 10 % இடஒதுக்கீட்டு மசோதா! January 10, 2019

Image
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, மாநிலங்களவையில் நிறைவேறியது. மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பக் கோரி திமுக எம்பி கனிமொழி கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. 
பொதுப்பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநிலங்களவையில் இம்மசோதாவை நேற்று காலை சமூக நீதித்துறை அமைச்சர் தாவர் சந்த் கேலாட் தாக்கல் செய்தார். ஆனால் மசோதாவிற்கு எதிராகவும், அவையை ஒருநாள் நீட்டிப்பு செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் திமுக, அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.  
மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது வரலாற்று தவறு என குறிப்பிட்டார். மத்திய அரசு தன்னிச்சையான முடிவுகளை எடுத்து, அவற்றை மக்கள் மீது திணிப்பதாக குற்றம்சாட்டினார். நாட்டில் ஒருவர் தனது பொருளாதார நிலையையோ, மதத்தையோ மாற்றிக் கொள்ள முடியும், ஆனால் சாதியை மட்டும் மாற்ற முடியாது என கனிமொழி தெரிவித்தார். இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்பி நவநீதிகிருஷ்ணன், உலகின் 6ஆவது பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுத்தாலும், நாட்டில் 98 சதவீதம் பேர் ஏழைகளாக இருப்பதாக குறிப்பிட்டார். எனவே, பொருளாதார ரீதியில் இடஓதுக்கீடு என்பதை செயல்படுத்த இயலாது என்றும் கூறினார்.
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் இரவு 10 மணி வரை நடந்த விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெற்றது. முன்னதாக, மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப கோரி, கனிமொழி கொண்டு வந்த தீர்மானம், போதிய உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 165 உறுப்பினர்களும், எதிர்ப்பு தெரிவித்து 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மை பலத்துடன் மசோதா நிறைவேற்றப்பட்டதாக, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் அறிவித்தார். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பிறகு விரைவில் சட்டமாக உள்ளது.

source ns 7.tv