source: ns7.tv
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு, மத்திய அரசு ஆயிரத்து 146 கோடி ரூபாய் நிவாரண தொகை ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தை சமீபத்தில் தாக்கிய கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பு அடைந்தன. ஏராளமான வீடுகள், தென்னை மரங்கள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரணமாக ஆயிரத்து 146 கோடியே 12 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இத்தொகை ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.