source ns7.tv
பிளாஸ்டிக் பொருட்கள் மீது தமிழக அரசு பிறப்பித்த தடையாணை இன்று முதல் அமலானது.
தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த ஜனவரி 1 முதல் தடைவிதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் தடையை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அமுதா, ராஜேந்திர ரத்னு, சந்தோஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது, தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.