source: ns7.tv
மேகதாது அணை விவகாரத்தில் மக்களவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள் 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் இன்றும் மக்களவையில் எதிரொலித்தது. மேகதாதுவில் அணை அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மையப்பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பலமுறை கேட்டுக் கொண்டும், அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி அதிமுக உறுப்பினர்கள் சத்தியபாமா, ஏழுமலை, அன்வர் ராஜா உள்ளிட்ட 26 பேரை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், 5 அமர்வுகள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். 374ஏ விதியின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவை இன்று காலை கூடியதும் மேகதாது விவகாரத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமளி செய்தனர்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோரை அவையில் இருந்து வெளியேறும்படி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.