சனி, 5 ஜனவரி, 2019

நடைபெறுமா திருவாரூர் இடைத்தேர்தல்? January 05, 2019

Authors
Image
கஜா புயல் பாதிப்பு காரணமாக திருவாரூர் இடைத்தேர்தலை இப்போது நடத்த வேண்டாம் என அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்துவது சரியானதாக இருக்காது என்றும், அதனை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.

இந்த மனு தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப  உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நிர்மல்ராஜ் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் சண்முகசுந்தரம், திமுக சார்பில் முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன், காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட சார்பில் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கஜா புயலால் பாதிப்பு காரணமாக இத்தொகுதியில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது எனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், வாக்காளர் அட்டைகளையும் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


இதற்கிடையே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்ததை அடுத்து திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சி பிரமுகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அழைப்பு விடுத்தார். அதன்படி தற்போது அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

source ns7.tv