திங்கள், 7 ஜனவரி, 2019

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? January 07, 2019

கஜா புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் திருவாரூரில் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 6ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டியிருந்ததால், கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், கடந்த 3ம் தேதி தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எழுதிய கடிதத்தில், கஜா புயலால் திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் ஏற்பட்ட கடுமையான சேதங்களை சுட்டிக்காட்டியும், புயல் பாதிப்புகளை சீரமைக்க 3 மாதங்கள் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டிருந்ததாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதனால், திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி உள்துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப் படி, புயலால் பாதிக்கப்பட்ட இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதே முதன்மையான செயலாக இருக்க முடியும் என்றும், அந்த வகையில், திருவாரூர் தொகுதியில் மீட்புப் பணிகளை தமிழக அரசு மேற்கொள்வதற்கு வசதி செய்து தர வேண்டும் என உள்துறை அமைச்சகம் விளக்கமளித்ததாகவும், இந்திய தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. கடந்த 3ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, புயல் பாதிப்பின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்தில் கொண்டு இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததையும் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. கடந்த 5ம் தேதி திருவாரூரில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், புயல் நிவாரணப் பணிகள் தொடர்வதற்கு ஏதுவாக இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது குறித்தும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

source: ns7.tv