source: ns7.tv
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு, புதிய ஓய்வூதியதிட்டத்தை திரும்ப பெறுவது என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதில் நாடு முழுவதும் 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், மின்வாரிய சங்கங்கள் என 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.
தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும் பங்கேற்பதால், அரசு மற்றும் வங்கிப் பணிகள் பாதிக்கப்படுவதுடன், பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.