Authors
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு தரமறுக்கும் காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிண்டியில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளதாகவும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வழக்கின் விசாரணை அதிகாரி குமார், தனது பணியை பார்க்காமல் டிஜிபி அலுவலகத்தில் பேட்டியளிப்பதாகவும் மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன்
தெரிவித்தார்.
தெரிவித்தார்.
இதேபோன்று கிண்டியில் தமக்கு அலுவலகம் மறுக்கப்படுவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் முறையிட்டார். நீதிமன்றம் உத்தரவிட்டும், அலுவலகம் இல்லாமல் தாம் தெருவில் நிற்பதாகவும், காவல்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், நீதிமன்றம் ஜாமின் மற்றும் முன் ஜாமின் வழங்க மறுத்த குற்றவாளிகளை டிஜிபி அலுவலகத்திற்கு அழைத்து சென்று தமக்கு எதிராக புகார் அளிப்பதாகவும் பொன் மாணிக்கவேல் கூறினார். இதனை தொடர்ந்து, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தின் உத்தரவை அரசு மீறியுள்ளதாக குறிப்பிட்டனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், இதுதொடர்பான தமிழக அரசின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், பொன் மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காத காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் எனவும் எச்சரித்தனர். இந்த வழக்கு, ஜனவரி 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
source: ns7.tv