வெள்ளி, 11 ஜனவரி, 2019

சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து அலோக் வர்மா அதிரடி நீக்கம்! January 11, 2019

source: ns7.tv
Image
உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மீண்டும் பணியில் இணைந்த சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு அதிரடியாக நீக்கியுள்ளது. ஆனால், பொய்ப் புகாரின் பேரில் தன்னை பணியிட மாற்றம் செய்துள்ளதாக அலோக் வர்மா மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா லஞ்ச புகார் காரணமாக நள்ளிரவில் திடீரென பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அலோக் வர்மா அதில் வெற்றியும் கண்டார். இதையடுத்து, 3 மாதங்களுக்கு பின் சிபிஐ இயக்குநராக மீண்டும் பொறுப்பேற்ற அலோக் வர்மா, சில அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், பழைய உத்தரவுகளை ரத்து செய்தும் அதிரடி காட்டினார். இந்த நிலையில், சிபிஐ இயக்குநரின் தேர்வுக்கான உயர்மட்டக்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த குழுவில் இருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வழக்கில் தீர்ப்பளித்த காரணத்தால், நீதிபதி ஏ.கே.சிக்ரியை குழுவில் சேர்க்க பரிந்துரை செய்தார். 
இதனால் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர்  இதில் பங்கேற்றனர். பெரும்பான்மை அடிப்படையில் அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, டெல்லி தீயணைப்புத்துறை, குடிமை பாதுகாப்பு, ஊர்க்காவல் படை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் செயல்படுவார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.