credit ns7.tv
பாபர் MASJID வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் விடிய விடிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதித்த பின்னரே அவர்களை ரயில் நிலையத்திற்குள் போலீசார் அனுமதித்தனர். வெளியூர் செல்லும் ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படையினரும், சென்னை போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சண்முக வடிவேல், சந்தேகப்படும் விதத்தில் சுற்றித் திரிபவர்களிடம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் தலைமைச் செயலகத்தில் வெளிவாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்பு பணிகளைக் கருத்தில் கொண்டு போலீசார் விடுமுறை எடுப்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கோவையில் நள்ளிரவு முதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை ரயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய வழிபாட்டுத் தலங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வருவதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான செண்பகத் தோப்பு உள்ளிட்ட இடங்களில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி வாகன சோதனை ஈடுபட்டனர். மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் அவர்கள் தங்கள் சோதனையை மேற்கொண்டனர்.