வெள்ளி, 1 நவம்பர், 2019

மஹா புயல்: தமிழத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...!

credit ns7.tv
Image
அரபிக்கடலில் தீவிர புயலாக உருவெடுத்துள்ள மஹா புயல், விரைவில் அதி தீவிர புயலாக மாறக் கூடும் என, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறினார். 
மஹா புயல் விரைவில் அதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்றும், மாலத்தீவுகள், கேரள கடற்கரை பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார். சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார். வங்கக் கடலில் வடக்கு அந்தமான் பகுதியில் வரும் 4ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும் பாலச்சந்திரன் கூறினார். 
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அரபிக்கடலில் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் கடந்த வாரம் உருவான கயார் புயல், வலுப்பெற்று மிக அதி தீவிர புயலாகவும், பின்னர் சூப்பர் புயலாகவும் உருவெடுத்தது. ஓமன் கடற்கரையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயலின் தீவிரம் படிப்படியாகக் குறைந்து, தெற்கு நோக்கி நகர்ந்தது. 
தற்போது, அதி தீவிர புயலாக உள்ள கயார் புயலானது வடமேற்கு அரபிக்கடலில் நிலைகொண்டுள்ளது. இதேபோல், குமரி கடலில் உருவாகியுள்ள மஹா புயல், லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வெப்பமண்டல புயல்கள் அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் சூழல் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.