வெள்ளி, 1 நவம்பர், 2019

ஆயிரகணக்கான பணியாளர்களை நீக்க காக்னிசண்ட் நிறுவனம் முடிவு!


Image
தொழில்நுட்பத்துறை ஜாம்பவனான காக்னிசண்ட் நிறுவனம், அந்நிறுவனத்தில் பணிபுரியும் 7000 மூத்த நிலை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
உலகின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில் மும்பை, பெங்களூரு, ச்ன்னை, குர்ஹான், ஹைதராபாத், கொச்சின், கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில், 2,88,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். காக்னிசண்ட் இந்தியாவில் அதிக பணியாளர்கள் பணியாற்றிவரும் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். இந்நிலையில், செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள காக்னிசண்ட் நிறுவனம், அதன் நிறுவனங்களின் பல்வேறு கிளைகளில் பணியாற்றும் 7,000 பணியாளர்களை வெளியேற்ற முடிவெடுத்துள்ளது. 
NASDAQ தகவலின்படி, அடிப்படையில் இந்நிறுவனம் 12,000 பணியாளர்களை வெளியேற்ற முடிவு செய்ததாகவும், ஆனால், அவர்களில் 5,000 பேருக்கு மீண்டும் பயிற்சி அளித்து வெவ்வேறு இடங்களில் பணியமர்த்த முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், 5000 பேர் போக மீதி 7000 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த பணி நீக்கத்தில் பெரும்பாலும் நடுத்தர மற்றும் மூத்த நிலை பணியாளர்களாக(அனுபவத்தின் அடிப்படையில்) இருப்பார்கள் என்றும், பணிநீக்கமானது 2020ம் ஆண்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், அதிகம் பாதிக்கப்பட இருப்பது இந்தியாவில் இருக்கும் பணியாளர்கள் தான். அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில், கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் இந்தியாவில் பணிபுரிகின்றனர். குறிப்பாக, சென்னை மற்றும் பெங்களூரு கிளைகளில் அதிகம் பேர் பணிபுரிகின்றனர். இந்த கிளைகளில் பணிபுரிபவர்கள் தான் வேலையிழப்பை சந்திக்க வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும், எந்தெந்த கிளைகளில் பணிநீக்கம் இருக்கும் என்பது குறித்த வெளிப்படையான அறிவிப்பை  காக்னிசண்ட் நிறுவனம் வெளியிடவில்லை.
காக்னிசண்ட் நிறுவனத்தின் இயக்க முறையை எளிமைபடுத்த இருப்பதாலும், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதலீட்டை அதிகரிக்க செலவு குறைப்பு திட்டத்தை நடமுறைபடுத்த இருப்பதாகவும் அந்நிறுவனத்தின் சிஇஓ ப்ரையன் ஹம்ப்ரைஸ் தெரிவித்துள்ளார். இதனால், உலகம் முழுவதிலும் இருந்து 10000 முதல் 12000 பேர் வரையிலான, நடுத்தர மற்றும் மூத்த பணியாளர்கள் அவர்களது தற்போதைய பதவியில்ல் இருந்து 2020ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
“மீதமுள்ள 5,000-7,000 மூத்த பணியாளர்கள் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறுவனத்திலிருந்து வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்று காக்னிசண்ட் நிறுவனத்தின் சிஎஃப்ஓ காரன் மெக்லாலின் தெரிவித்துள்ளார்.

credit : ns7.tv