வியாழன், 31 அக்டோபர், 2019

உருவானது மகா புயல்: 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!

Image
அரபி கடலில் உருவாகியுள்ள மகா புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
அரபி கடலில் ஏற்கனவே கியார் புயல் உருவாகியுள்ள நிலையில், புதிதாக மகா புயல் உருவாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,  மகா புயல் திருவனந்தபுரத்தில் இருந்து 320 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் நிலைக்கொண்டுள்ளதாக கூறினார். 
லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மகா புயல், தீவிர புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுவதால், மணிக்கு 65 கிலோ மீட்டர் முதல் 85 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என அவர் கூறினார். 
மேலும், புயல் காரணாக, தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கூறினார். 

credit ns7.tv