வெள்ளி, 1 நவம்பர், 2019

விற்பனைக்கு வந்த இந்தியர்களின் டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள்!

Image
சுமார் 13 லட்சம் இந்தியர்களின் கிரெடிட், டெபிட் கார்டு விவரங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல இந்திய வங்கிகளைச் சேர்ந்த சுமார் 13 லட்சம் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியாகியுள்ளதாக சிங்கப்பூரைச் சேர்ந்த Group-IB என்ற இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கிரெடிட்/டெபிட் கார்டு விவரமும் தலா 100 அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பில் மொத்த விவரங்களும் 920 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாக்கும் நோக்கில் விவரங்கள் வெளியாகியிருப்பது உண்மை என்று கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கார்டுகளை ரத்து செய்துவிட்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை  வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரிசர்வ் வங்கி தரவுகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நாட்டில் மொத்தமாக 51.7 மில்லியன் கிரெடிட் கார்டுகளும், 851.5 மில்லியன் டெபிட் கார்டுகளும் பயன்பாட்டில் உள்ளது. 

credit ns7.tv